Friday, May 22, 2015

சென்னையில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக செல்வி ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்வு – உறுப்பினர்கள் ஆரவார வரவேற்பு – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர் செல்வம்

By
சென்னையில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக செல்வி ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காலை 7 மணிக்கு தலைமைக் கழகத்தில், கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றக் கட்சியின் தலைவராக, கழகப் பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானம் கழக சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை சென்னையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. இதில், அ.இ.அ.,தி.மு.க. சட்டமன்றக்குழுத் தலைவராக செல்வி ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதா, ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, கழக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள தலைமைக்கழகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாலையிலேயே தலைமைக் கழகத்திற்கு வந்தனர். கூட்டம் நடக்கும் தலைமைக்கழக அலுவலக அரங்கிற்குள் சென்ற அவர்கள் அங்குள்ள வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர், தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான செல்வி ஜெயலலிதா, சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செல்வி ஜெயலலிதாவின் பெயரை அறிவித்தவுடன் உறுப்பினர்கள் உற்சாகத்துடன் கைத்தட்டி, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கழகப் பொருளாளர் திரு.ஓ.பன்னீர் செல்வம் இந்தக் கூட்டத்தில் முறைப்படி அறிவித்தார்.

0 comments:

Post a Comment