Wednesday, May 18, 2016

திமுக – காங்கிரஸ் கூட்டணி முன்னிலை… புதுவையில்!

By
புதுவை: புதுவை சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. புதுவை சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த 30 தொகுதிகளில் 344 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள 930 வாக்குச்சாவடிகளில் இறுதி நிலவரத்தின்படி 84.08 சதவீதம் வாக்குகள் பதிவானது.
மொத்தம் உள்ள 9 லட்சத்து 41 ஆயிரத்து 395 வாக்காளர்களில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 511 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 68 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 22 ஆயிரம் பேரும் அடங்கும். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ‘வெப்’ கேமரா மூலம் கண்காணிப்பும் செய்யப்படுகிறது. இதுவரை அங்கு 9 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திமுக – காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் 3 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதுதவிர, தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் தொகுதிகளில் 8 தொகுதிகளில் திமுக – காங்கிரஸ் கூட்டணியும், என்.ஆர்.காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இது தவிர சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் ஒரு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.

0 comments:

Post a Comment