Saturday, April 11, 2015

கோடை வெய்யிலை சமாளிக்க எளிய முறைகள்!

By
h15
வெயில் உக்கிரமாகி வருவதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. ‘சுள்’ளென்று அடிக்கும் வெயில் மண்டையை பிளந்து விடும் போல உள்ளது. அனல் காற்று உடம்பு முழுவதும் பரவி ‘தகதக’வென எரிய வைக்கிறது. இதனால் சாதாரணமாக வெளியில் சென்று வந்தாலே உடலும், உள்ளமும் சோர்வடைந்து விடுகிறது.
நாக்கை வறண்டு போக செய்யும் கோடை வெயில் காலத்தில் நாம் ஒவ்வொருவரும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக வெயிலில் செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள் முன் எச்சரிக்கையுடன் இருந்தால் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். கோடை வெயிலில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமானால் எப்போதும் உங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
காலையில் எழுந்தவுடன் இரண்டு முதல் நான்கு கிளாஸ் வரை நீர் பருகுங்கள். ஒரு மணிக்கொரு முறை சிறிது நீர் பருகுங்கள். சோற்றுக் கற்றாழை பசுமையாய் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். அதனை உடலில் தடவி தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளியுங்கள். உடம்பு ஏசி போட்டதுபோல இருக்கும். இல்லையெனில் சோற்று கற்றாழை ஜெல் என கிடைக்கும்.
அதனை உடலில் நன்கு தடவிக் கொள்ளுங்கள். வெயில் என்று உடற்பயிற்சியை நிறுத்தி விடாதீர்கள். உடற்பயிற்சிக்கு என்றுமே விடுமுறை கிடையாது. வெயிலை சமாளிக்க உடற்பயிற்சி அவசியம். ஆனால் கொளுத்தும் வெயிலில் சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டாம். தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு என பழங்களை சாப்பிடுங்கள்.
வெள்ளரி, கோஸ், பூசணி, வாழைத்தண்டு, கேரட், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை இவைகளை ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். இவை உங்களை கோடைக்காலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இலகுவான புரதத்தினை சேர்த்துக் கொள்ளுங்கள். சோயா, பருப்பு வகைகள் போன்றவை எளிதான சத்தான புரதங்கள்.
பாதாம், பிஸ்தா போன்றவைகளையும் அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளியும், மாதுளையும், நெல்லியும் கோடைக்காலத்திற்கு கண்கண்ட அமிர்தம் என்பதால் இதனை தினமும் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். மிளகு, இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய், காரம் குறிப்பாக ஊறுகாய், வத்தல் இவை கோடை காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை.
நிறைய நீர், மோர் குடியுங்கள். ஐஸ் கட்டி, மிகவும் குளிர்ந்த ஐஸ்கிரீம் இவை அவசியம் தவிர்க்கப்பட வேண்டியவை. சிறு சிறு அளவாக உண்ணுங்கள். அதிக நீர் சத்து உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கோடை காலத்தில் பிள்ளைகளை அழைத்து கொண்டு வெளியில் செல்வதும் உணவு அருந்துவதும் குடும்ப மகிழ்ச்சிதான்.
ஆனால் இந்த கோடையில்தான் கிருமிகள் வேகமாக பரவும். எனவே வீட்டில் தயாரித்த உணவுகளையே சாப்பிடுவது நல்லது. கோடையில் காய்கறிகள், பழங்கள் விரைவில் கெட்டு விடும். எனவே அவை கெட்டு விடாது இருக்க உங்கள் குளிர்சாதன பெட்டியினை சரியான டிகிரியில் செட் செய்யுங்கள்.

0 comments:

Post a Comment